Monday 15 July 2013

Tamil - Benefits of Adhalaikkaai


நம் நாவில் பட்டவுடன், முதலில் எந்த உணர்ச்சியை நாவிற்கும், மூளைக்கும் உணர்த்துகிறதோ, அந்த உணர்வே நாம் உட்கொள்ளும் பண்டத்தின் சுவையாகும். இவை நாவிற்கு ருசியை தருவதுடன், உண்பதற்கு இனிமையையும், மனதிற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஊட்டத்தையும், நுண்கிருமிகளுக்கு எதிர்ப்பையும் தருபவையே. கசப்பு சுவை, ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நுண்கிருமிகளை வெளியேற்றி, உடல் எரிச்சலை தணித்து, அதிகரித்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. அது மட்டுமின்றி, சளி, அஜீரணம் போன்ற நாட்பட்ட தொல்லைகளை நீக்குவதுடன், வாய் மற்றும் உணவுப்பாதைகளிலுள்ள அழுக்குகளையும் கழிவாக வெளியேற்றும் தன்மை உடையன. இதுபோன்ற கசப்பு தன்மையுடைய, மருந்தாக பயன்படும் உணவு தான் “அதலைக்காய்!’

“மொமார்டிகா டியுபரோசா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட “குக்கர்பிட்டேசியே’ குடும்பத்தை சார்ந்த அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான பண்புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

துவரம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து, குழைய வேகவைத்து கொள்ள வேண்டும். அத்துடன் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிய அதலைக்காய் – 10 கலந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பூண்டு – 1 பல், தக்காளி –2, சிறிய வெங்காயம் – 5 அனைத்தையும் மைய நசுக்கி, சட்டியில் தேவையான நீர் சேர்த்து நன்கு வேக வைத்து, அத்துடன் பருப்பு மற்றும் “அதலைக்காய்’ கலவையை கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, இறுதியில் சோம்பு, லவங்கப்பட்டை மற்றும் கறிவேப்பிலையை தாளித்து போட்டு, இறக்கி வைத்து கொள்ள வேண்டும். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை குடித்து வர வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியன நீங்கும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச்சத்து குறையும். நாட்பட்ட புண்கள் ஆறும்.

No comments:

Post a Comment